புருனோ ஒரு அழகான எட்டு வயது பையன். விறைப்பும் முறைப்புமான ராணுவ அதிகாரியின் மகன். அவனுடைய அக்காளுக்கு வயது பன்னிரெண்டு. சாகசக் கதைகள் அதிகம் படிக்கும் புருனோ தான் ஒரு கண்டுபிடிப்பாளர் என தன்னையே அடிக்கடி சொல்லிக் கொள்கிறான்.
ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பும் புருனோ தன் வீடு பார்ட்டிக்குத் தயாராவதைக் கவனிக்கிறான். அம்மாவிடம் காரணம் கேட்க அப்பாவுக்கு புரமோசன் கிடைத்திருப்பதாக சொல்கிறாள். புருனோவுக்கு புரமோசன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.
அடுத்த நாளே வேலை நிமித்தமாக நாம் எல்லோரும் ஒரு அழகான கிராமப்புறத்திற்கு செல்ல போகிறாம் என்று அப்பா புருனோவிடம் சொல்கிறார். புருனோ இந்த வீட்டை விட அழகான இடம் வேறெங்கும் இல்லை என்கிறான். புதிய வீடு மிகப்பெரியது என்றும் அங்கு தோட்டம் கூட இருப்பதாகவும் சொல்லி புருனோவை அம்மா சமாதானப் படுத்துகிறாள்.
தன் பள்ளி நண்பர்களை பிரிய மனமில்லாமல் அரைமனதுடன் புருனோ புதிய வீட்டிற்கு செல்கிறான். வீட்டுக்குள் சென்றதில் இருந்தே அது ஒரு விநோதமான வீடாக இருப்பதாக புருனோ உணருகிறான். வீட்டுக்கு பின்புறம் உண்மையில் நாசி கைதிகளின் முகாம் இருக்கிறது. புருனோவின் அப்பாவின் தலைமையிலான ராணுவம் அங்குள்ள யூதர்களை அடிமையாக நடத்துகிறார்கள். இது புரியாத புருனோ அவர்கள் எல்லோரும் விவசாயிகள் என்று நினைக்கிறான். "இவர்கள் எல்லோரும் ஏன் பைஜாமா(கைதிகளின் சீருடை) அணிகிறார்கள்?" என பெரியவர்களை கேட்கிறான்.
புருனோ அந்த வீட்டில் பெரும்பாலும் தனிமையில் விடப்படுகிறான். அவனுடைய அக்காள் அவனுடன் விளையாடமல் அவளை பெரிய மனுஷியாக கற்பனை பண்ணிக்கொள்கிறாள். அங்கு வரும் கோட்லர் என்ற உயரமான ராணுவ அதிகாரியை அவளுக்கு பிடித்திருக்கிறது.
பொழுது போகாத புருனோ அங்கு வேலை பார்க்கும் பாவெல் என்ற வயதானவரிடம் ஒரு டயர் கேட்டு வாங்குகிறான். பின் மரத்தில் ஊஞ்சல் கட்டுகிறான். ஊஞ்சலில் விளையாடும் போது தவறி விழும் புருனோவுக்கு பாவெல் கட்டு போடுகிறார். "நீங்க என்ன டாக்டரா?" என புருனோ கேட்க "ஆம் இங்கே வருவதற்கு முன்னால் டாக்டராகத் தான் இருந்தேன்" என கண் கலங்குகிறார்.
வீட்டிற்கு பின் உள்ள தோட்டத்திற்கு செல்லக்கூடாது என புருனோவை அப்பா கண்டிக்கிறார். புருனோ ஒரு கண்டுபிடிப்பாளர் ஆதலால் அவனுடைய அம்மா வீட்டில் இல்லாத நேரம் தோட்டத்துக்கு செல்ல ஒரு வழி கண்டு பிடிக்கிறான். அங்கு நீண்ட தூரம் செல்லும் புருனோ அந்த இடம் உயரமான வேலியால் சூழ்ந்திருப்பதைப் பார்க்கிறான். வேலிக்கு அந்தப்பக்கம் அவனுடைய வயது பையன் அமர்ந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
அந்த யூதச் சிறுவன் தன்னுடைய பெயர் சுமெல் என்கிறான். அது மிகவும் வித்தியாசமான பெயர் என புருனோ சொல்கிறான். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது "சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா?" என சுமெல் கேட்கிறான். திடீரென அங்கு மணி ஒலிக்க சுமெல் வேகமாக முகாமுக்கு சென்று விடுகிறான்.
அடுத்த நாள் சமையலறையிலிருந்து உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் அதே நேரத்தில் சுமெல்லை சந்திக்கிறான். சுமெல் புருனோ கொடுத்த உணவை விரும்பி சாப்பிடுகிறான். அன்றிலிருந்து தினமும் அம்மாவிடம் ஊஞ்சலில் விளையாடுவதாக பொய் சொல்லி தினமும் தின்பண்டங்களுடன் சுமெல்லை சந்திக்கிறான்.
இதற்கிடையில் புருனோ அவ்வப்போது வீட்டில் கெட்ட வாசம் வீசுவதாக உணர்கிறான். பின்னால் கைதிகள் முகாமில் இருந்து வரும் புகையை தற்செயலாக கவனிக்கும் புருனோவின் அம்மா காரணம் புரிந்ததால் அப்பாவுடன் சண்டையிடுகிறாள்.
அப்பா புருனோவுக்கும் அக்காளுக்கும் ஒரே ஒரு ஆசிரியரை பணியமர்த்துகிறார். புருனோ அந்த வயதான ஆசிரியரை வெறுக்கிறான். அவர் யூதர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று சொல்கிறார். புருனோவின் அக்காளும் அதை ஒத்துக் கொள்கிறாள். "ஏன் நல்ல யூதர்கள் உலகத்தில் இல்லையா?" என புருனோ எதிர் கேள்வி கேட்க "இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல யூதனை கண்டுபிடித்தால் நீ தான் உலகத்திலேயே சிறந்த கண்டுபிடிப்பாளர்" என்கிறார் ஆசிரியர்.
ஒரு நாள் பாத்திரங்களை துடைக்க சுமெல் புருனோவின் வீட்டுக்கு வரவழைக்கப் படுகிறான். சுமெல்லை தன் வீட்டு அறையில் பார்க்கும் புருனோ மகிழ்ச்சி அடைந்து அவனுக்கு ஒரு கேக் கொடுக்கிறான். திடீரென்று அங்கு வரும் அதிகாரி கோட்லர் சுமெல்லை திருடினாயா என மிரட்ட தன்னுடைய நண்பன் புருனோ தான் கேக் குடுத்ததாகச் சொல்கிறான். கோட்லர் புருனோவை "உனக்கு இந்த யூதனை தெரியுமா" என அதட்டி கேட்க பயந்து போகும் புருனோ தனக்கு தெரியாது என புளுகுகிறான்.
அதன் பிறகு சுமெல்லை புருனோவால் பார்க்க முடியவில்லை.தன் செயலுக்காக புருனோ மிகவும் வருந்துகிறான்.சிறிது நாட்களில் மீண்டும் சுமெல்லை ஒரு கண் காயப்பட்ட நிலையில் சந்திக்கிறான். புருனோ மன்னிப்பு கேட்கிறான். மீண்டும் இருவரும் நண்பர்களாகிறார்கள்.
ஒரு நாள் அப்பா புருனோவையும் அக்காவையும் அழைத்து அடுத்த நாளே அவர்கள் தங்கள் அத்தை வீட்டுக்கு சென்று விட வேண்டும் என சொல்கிறார். அன்று சுமெல்லை சந்திக்கும் புருனோ தான் மறுநாள் கிளம்ப போவதை சொல்கிறான். சுமெல் தன்னுடைய அப்பா திடீரென காணாமல் போய் விட்ட கெட்ட செய்தியை சொல்கிறான்.
புருனோ தனக்கு ஒரு பைஜாமா வேண்டும் எனவும் மறுநாள் சுமெல்லின் அப்பாவை தானே கண்டுபிடித்து தருவதாகவும் சொல்கிறான். சுமெல் தனக்கு ஒரு பெரிய சாண்ட்விச் வேண்டும் என்று கேட்கிறான்.
கடைசி நாள் இருவரும் சந்தித்தார்களா? புருனோவுக்கு பைஜாமாவும் சுமெல்லுக்கு சாண்ட்விச்சும் கிடைத்ததா? புருனோ சுமெல்லின் அப்பாவை கண்டுபிடித்தானா? டிவிடி கிடைத்தால் கண்டுபிடிப்பாக பாருங்கள்.
********************************************************************************
The boy in the striped pyjamas என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் இது. John Boyne எழுதிய இந்த புத்தகம் உலகம் முழுவதும் ஐந்து மில்லியன் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.
வன்முறையை எதிர்க்கும் இந்தப் படம் வன்முறையை கொண்டாடாத காட்சிகளால் நம்மை வெகுவாக ஈர்க்கிறது.
*******************************************************************************
என்னுடைய முதல் பதிவுக்கு வந்து இந்த கடைசி வரி Scroll பண்ணி படித்த அனைவருக்கும் நன்றி!
லேபிள்கள்:
உலக சினிமா,
the boy in the striped pyjamas
|
Estou lendo: பைஜாமாவில் ஒரு பையன் - ஒரு பக்கா உலக சினிமாTweet this! | Assine o Feed |
2
கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)